கூச்சிங் : சரவாக் மாநிலத்தின் தலைநகர் கூச்சிங்கில் இயங்கும் கே.கே.மார்ட் கிளை ஒன்றின் மீது கடந்த ஞாயிறு (மார்ச் 31) போத்தல் வெடிகுண்டு வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் கே.கே.மார்ட் விவகாரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் 3-வது கிளை இதுவாகும்.
இந்தத் தாக்குதல் குறித்து சரவாக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு கண்ணாடி போத்தலில் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்டு கே.கே.மார்ட் கடையின் நடைபாதை மீது வீசப்பட்டது என காவல்துறையில் புகார் செய்யப்பட்டிருக்கிறது.
காலுறைகளில் இஸ்லாமிய மதம் தொடர்பான வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததால் கே.கே.மார்ட் மீது கண்டனங்களை அம்னோ இளைஞர் பகுதி முன்வைத்தது.
அதைத் தொடர்ந்து, பேராக், பீடோர் வட்டாரத்திலுள்ள கே.கே.மார்ட் கிளை மீது மார்ச் 26-ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தப்பட்டது. மார்ச் 29-ஆம் தேதி குவாந்தானிலுள்ள கே.கே.மார்ட் மீது இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டது.
தற்போது சரவாக்கில் 3-வது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.