கோலாலம்பூர் : மஇகா கட்சித் தேர்தல்களில் தலைவராக டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும் துணைத் தலைவராக டத்தோஸ்ரீ எம்.சரவணனும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட நிலையில் மற்ற பதவிகளுக்கான தேர்தல் இன்று சனிக்கிழமை (ஜூலை 6) நடைபெறுகிறது. பிற்பல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை ஒவ்வொரு மாநிலத்திலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் தொகுதிகளின் பேராளர்கள் வாக்களிக்கின்றனர்.
ஒவ்வொரு கிளையிலிருந்தும் 6 முக்கியப் பொறுப்பாளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
மாநில நிலையில் 10 செயலவையினரை தேர்ந்தெடுப்பதற்கும் போட்டிகள் நடைபெறுகின்றன. சில மாநிலங்களில் 10 செயலவையினர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சில மாநிலங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. சிலாங்கூர், பேராக், ஆகிய மாநிலங்கள் உள்ளிட்ட சில மாநிலங்களில் 10 செயலவையினருக்கான தேர்தல்கள் இன்று நடைபெறுகின்றன.
இந்தப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல், கடந்த சனிக்கிழமை (ஜூன் 22) மஇகா தலைமையகத்தில் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை நடைபெற்றது.
கூட்டரசுப் பிரதேசம், சபா, கிளந்தான், திரெங்கானு, ஜோகூர், பினாங்கு ஆகிய மாநிலங்களில் 10 செயலவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 21 மத்திய செயலவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் 45 பேர் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளனர். சிலர் தங்களின் மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.
3 உதவித் தலைவர்களுக்கு நால்வர் போட்டி
இதற்கிடையில் மஇகாவின் 3 உதவித் தலைவர்களுக்கான போட்டியில் 4 பேர் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.
மஇகா பேராளர்கள், கிளைத் தலைவர்களின் கவனம் முழுவதும் தற்போது உதவித் தலைவர்கள் போட்டியின் மீது திரும்பியிருக்கிறது.
தற்போது முதலாவது உதவித் தலைவராக இருக்கும் டத்தோ டி.மோகன் மீண்டும் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்குச் சீட்டு எண் 1 கிடைத்தது.
டத்தோ நெல்சன் ரங்கநாதன், டத்தோ டி.முருகையா, டத்தோ எம்.அசோஜன் ஆகிய மூவரும் மற்ற உதவித் தலைவர் வேட்பாளர்களாவர்.
நடப்பு 3 உதவித் தலைவர்களில் யாராவது ஒருவர் தோற்கடிக்கப்படுவாரா? அவ்வாறு ஒருவர் தோல்வியடைந்தால் அவருக்குப் பதிலாக நெல்சன் உதவித் தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.