Home நாடு ரமணனைச் சாடினார் ரபிசி – “இன்னும் மஇகா பாணியில் சிக்கிக் கொண்டுள்ளார்”

ரமணனைச் சாடினார் ரபிசி – “இன்னும் மஇகா பாணியில் சிக்கிக் கொண்டுள்ளார்”

98
0
SHARE
Ad
ரபிசி ரம்லி

கோலாலம்பூர் : பிகேஆர் கட்சித் தேர்தலில் உதவித் தலைவருக்குப் போட்டியிடும் டத்தோஸ்ரீ ரமணன் ‘குழப்பமடைந்துள்ளார்’ என்றும் இன்னும் அவர் தனது பழைய கட்சியான மஇகாவின் பாணியில் சிக்கியிருக்கிறார் என்றும் டத்தோஸ்ரீ ரபிசி ரம்லி சாடியுள்ளார்.

பிகேஆர் தலைவர்கள் அணுக முடியாதவர்களாக இருப்பது குறித்த ஆர் ரமணனின் கருத்துக்களுக்கு துணைத் தலைவர் ரபிசி ரம்லி, கிண்டலுடன் பதிலளித்தார்.

சீர்திருத்தவாத கட்சியாகத் திகழும் பிகேஆர் – மஇகாவைப் போன்று உறுப்பினர்களின் அடித்தள தேவைகளை பூர்த்தி செய்ய போதிய நிதி வளங்களைக் கொண்டிருக்கவில்லை என ரபிசி சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

சில உயர் தலைவர்கள் அதிகாரத்தைப் பெற்ற பிறகு “அணுக முடியாதவர்களாக” மாறியதால் அடித்தள உறுப்பினர்களிடையே ஏமாற்றம் அதிகரித்து வருவதாக  பிகேஆர் தகவல் பிரிவின் துணைத் தலைவர் ஆர் ரமணன் தெரிவித்த கருத்துகளுக்கு ரபிசி ரம்லி கிண்டலான பதிலை வழங்கினார்.

தான் அடித்தள உறுப்பினர்களை கவனிப்பதில்லை என்பதை ரபிசி  ஒப்புக்கொண்டார். சீர்திருத்தவாத கட்சியாக, பிகேஆருக்கு அவ்வாறு செய்ய நிதி வளங்கள் இல்லை என்று ரபிசி விளக்கினார்.

கட்சித் தேர்தல்களில், துணைத் தலைவர் பதவிக்கு பிரதமரும் பிகேஆர் தலைவருமான அன்வார் இப்ராகிமின் மகள் நூருல் இசாவை எதிர்கொள்ளவிருக்கும் நடப்பு துணைத் தலைவரான ரபிசி ரம்லி, ரமணன் 2020இல்தான் பிகேஆர் கட்சியில் இணைந்ததால் அவர் இன்னும் பிகேஆரில் புதியவர் என்றும் அவரைக் குறைகூற முடியாது” என்றும் குறிப்பிட்டார்.

டத்தோஸ்ரீ ஆர்.ரமணன்

“நான் அவரைக் குற்றம் சாட்ட முடியாது; அவரது பழைய கட்சியான மஇகாவில் இருந்து அவர் வந்திருப்பதால் – எங்கள் கட்சியின் கலாச்சாரத்தால் அவர் குழப்பமடைந்திருக்கலாம். ரமணன் கூறியது போல் அடித்தளத்தை கவனித்துக் கொள்வது பண அரசியல். நான் கட்சியை அப்படி நிர்வகிப்பதில்லை. நான் அதைச் செய்ய விரும்பினால் (பணம் கொடுக்க, பரிசுக்கூடைகளை விநியோகிக்க), நான் வேறொரு கட்சியில் சேர்வேன்” என்றும் ரபிசி ரம்லி கூறினார் .

“ரமணன், கட்சியின் மறுமலர்ச்சிப் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை அனுபவிக்கவில்லை. நிச்சயமாக, அவர் வெற்றி பெற்று அரசாங்கத்தின் ஒரு பகுதியாக ஆகும்போது, அவர் நேர்மையாக அந்த கலாச்சாரத்தை அரவணைக்கலாம். ஆனால் இதன் காரணமாக, நல்லவராக இல்லாத துணைத் தலைவராகக் கருதப்படுகிறேன்” என்று ரபிசி ரம்லி கடந்த சனிக்கிழமை (மே 10)  நேரலையில் ஒளிபரப்பப்பட்ட “யாங் பாக்கார் மந்திரி” என்ற நேர்முகப் பேட்டியில் கூறினார்.

‘மேலணி துண்டுகளுக்காக செலவிடப்பட்ட லட்சக்கணக்கான ரிங்கிட்’

பணம் கொடுத்து அடித்தளத்தை கவனித்துக் கொள்வது பிகேஆரின் அசல் மதிப்புகளில் இருந்து விலகுவதாகும் என ரபிசி கூறினார்.

“பிகேஆரில் எங்கள் கலாச்சாரம் வித்தியாசமானது; நாங்கள் நம் நண்பர்களை வலுப்படுத்த கீழிறங்குகிறோம், அதனால் அவர்கள் தங்கள் நாடாளுமன்ற பகுதிகளில் மதிக்கப்படுகிறார்கள். நாங்கள் பணம் கொடுக்க முடியாது. ஏனெனில் கட்சிக்குப் பணம் இல்லை,” என்று அவர் கூறினார்.

பிகேஆரில் மகளிர் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சில வேட்பாளர்கள் மேலணிகளாக அணிந்து கொள்ளும் துண்டுகளை (ஸ்கார்ப்) வாங்குவதற்காக லட்சக்கணக்கான ரிங்கிட் செலவழித்ததாக ரபிசி கூறினார். இவை பேராளர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

வெள்ளிக்கிழமையன்று (மே 9) பிகேஆர் கட்சியின் அடித்தள உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட ரமணன் தலைவர்களை காணமுடியாமல் போகும் விவகாரத்தை எழுப்பினார்.

பெயர்களைக் குறிப்பிடாமல், முன்பு எப்போதும் கிடைத்துக்கொண்டிருந்த இந்த தலைவர்கள், பதவிகளைப் பெற்ற பின் தொடர்பு கொள்ள முடியாதவர்களாக மாறிவிட்டதாக அவர் கூறினார்.

“ஆனால் உயர் தலைவர்களாக மாறிய பிறகு, ஓட்டுனர், மெய்க்காப்பாளர்கள், வீடு, கார், உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகளைப் பெற்ற பிறகு, அவர்களை அணுகுவது கடினமாக உள்ளது. இது பல உறுப்பினர்கள் ஏமாற்றமடைய காரணமாகியுள்ளது. அதனால்தான் நான் சொல்கிறேன், நீங்கள் பதவி உயர்வு பெறும்போது, நீங்கள் தரையில் நிலைகொண்டிருக்க வேண்டும். நிச்சயமாக, இதில் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன, ஆனால் இது கட்சி உறுப்பினர்களிடமிருந்து நான் பெற்ற கருத்து,” என்று ரமணன் கூறியிருந்தார்.