Home One Line P1 “ஆட்சி மாற்றம்” அரசியல் நகர்வை திசை திருப்பிய மகாதீர்-அன்வார் சந்திப்பு! நடந்தது என்ன?

“ஆட்சி மாற்றம்” அரசியல் நகர்வை திசை திருப்பிய மகாதீர்-அன்வார் சந்திப்பு! நடந்தது என்ன?

873
0
SHARE
Ad
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அன்வாரின் இல்லத்தில் நடைபெற்ற தொழுகையின்போது…

கோலாலம்பூர் – அண்மையக் காலங்களில் பல அரசியல் பார்வையாளர்களும் ஒருமித்த குரலில் தெரிவித்து வரும் கருத்து, ஒவ்வொரு அரசியல் சர்ச்சையிலும், சிக்கலிலும், பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிதானமாகவும், முதிர்ச்சியுடனும் நடந்து கொள்கிறார் என்பதுதான்!

அன்வாரின் அந்த குணாதிசயங்கள் நேற்று முதல் தொடங்கிய “ஆட்சி மாற்றம்” என்ற விவகாரத்திலும் தெளிவாக வெளிப்பட்டது.

முதல் கட்டமாக, தான் அடுத்த பிரதமராகப் போகும் அரிய வாய்ப்பு பறிபோகிறதே என ஆத்திரத்துடனோ, பதட்டத்துடனோ அன்வார் செயல்படவில்லை.

#TamilSchoolmychoice

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பெட்டாலிங் ஜெயா ஷெராட்டன் தங்கும் விடுதியில் தனக்கு எதிரான அணியினர் ஒன்று திரண்டு, உற்சாகத்தோடு கலந்துறவாடி, இரவு விருந்துபசரிப்பு நடத்திக் கொண்டிருந்த தருணங்களில் கூட, அன்வார் தனது இல்லத்தில் திரண்டிருந்த ஆதரவாளர்களோடும் பினாங்கு முஃப்டியோடும் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்.

“நடந்து கொண்டிருப்பது துரோகச் செயல்” என அன்வார் வர்ணித்தாலும், மகாதீர் குறித்து கொஞ்சம் கூட தனது நெருடலையோ, அதிருப்தியையோ அன்வார் வெளிப்படுத்தவில்லை.

அன்வாரின் இந்த நடவடிக்கையால் அவர் மீதான அனுதாபம் மக்களிடையே பெருகத் தொடங்கியது என்பது உண்மை.

அன்வார் – மாமன்னர் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) தனது இல்லத்தில் திரண்ட ஆதரவாளர்களுடன் அன்வார்…

அதைத் தொடர்ந்து வந்த முதல் அறிவிப்பு அன்வார் ஆதரவாளர்களிடையே சற்று நிம்மதியையும், கொஞ்சம் எதிர்பார்ப்பையும் விதைத்தது. மாமன்னர் திங்கட்கிழமை பிற்பகலில் அன்வாரைச் சந்திக்கவிருக்கிறார் என்ற அறிவிப்புதான் அது!

அடுத்து இன்று காலை நடந்தது யாரும் எதிர்பாராத ஒன்று! காலையிலேயே (காலை மணி 9.22-க்கு அன்வாரின் கார் பிரதமர் அலுவலகம் நுழைந்திருக்கிறது) பிரதமரின் அலுவலகத்தை நோக்கிப் புறப்பட்டார் அன்வார். அவருடன் தனித் தனியே, அவரது துணைவியாரும் துணைப் பிரதமருமான வான் அசிசாவும், ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கும், அமானா கட்சித் தலைவர் முகமட் சாபுவும் இணைந்து கொண்டனர்.

பிரதமர் அலுவலகம் வரப்போவதில்லை என்றும் அவரது இன்றைய அலுவலக நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன எனத் தகவல்கள் வெளிவந்த நிலையில், பிரதமர் அலுவலகத்தில் இருந்து திரும்பி மகாதீரின் இல்லம் சென்றார் அன்வார்.

மகாதீரை அன்வாரே நேரடியாகத் தொலைபேசியில் அழைத்ததாகவும், பிரதமர் அவரை வீட்டுக்கு வரச் சொன்னதாகவும் இணைய ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

அதன்பிறகு, அன்வாரின் குழுவினருக்கும் மகாதீருக்கும் இடையில் நடந்த சந்திப்பு உணர்ச்சிபூர்வமாக இருந்தது என்றும் அனைவரும் திறந்த மனதோடு, ஒளிவு மறைவின்றி பேசினர் என்றும் அந்த ஊடகச் செய்தி தெரிவிக்கின்றது.

நடந்த துரோகச் செயலுக்கு மகாதீர் துணைபோகவில்லை என்று மகாதீரைத் தற்காத்தார் அன்வார்.

“கொள்கைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்றும் சீர்திருத்த மாற்றங்கள் தொடரப்பட வேண்டும் என்பதிலும் மகாதீரின் நிலைப்பாடு எனக்கு திருப்தி அளிக்கிறது. எங்களுக்கிடையில் நல்ல முறையில் சந்திப்பு நடந்தது” என அந்தச் சந்திப்பிற்குப் பின்னர் பிகேஆர் கட்சித் தலைமையகத்திற்குத் திரும்பியபோது அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் அன்வார்.

அரசாங்கத்தைப் “பின்கதவு” வழியாகக் கைப்பற்ற நினைப்பவர்களுக்கும், சீர்திருத்த மாற்றங்களுக்கு எதிரானவர்களுக்கும் துணைபோகமாட்டேன் என்ற மகாதீரின் உறுதி தன்னை நெகிழச்செய்தது என்றும் மகாதீருக்கு ஆதரவாகப் பேசினார் அன்வார்.

அடுத்தடுத்து நடந்தவை அதிரடி முடிவுகள்! மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலகியதோடு, பெர்சாத்து கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார்.

அம்னோவுடன் இணைந்து பணியாற்ற முடியாததால் மகாதீர் விலகினாரா?

அம்னோவோடு மீண்டும் இணைந்து பணியாற்ற முடியாது என்ற காரணத்தால் மகாதீர் பதவி விலகியதாக “தி எட்ஜ்” பத்திரிகை தெரிவித்தது. அந்தச் செய்தியைப் பின்னர் தனது பத்திரிகையாளர் சந்திப்பில் சுட்டிக் காட்டிய லிம் குவான் எங் அதுவே மகாதீரின் முடிவுக்குக் காரணம் என்று கூறினார்.

அன்வாரோ, மகாதீரைச் சந்தித்த கையோடு பிகேஆர் தலைமையகம் வந்து தனக்கு எதிராக சதித் திட்டம் தீட்டிய அஸ்மின் அலியையும், சுரைடா கமாருடினையும் கட்சியிலிருந்து நீக்கினார்.

அடுத்து பிற்பகலில் அன்வாரை மாமன்னர் சந்திக்க, மாலை 5 மணிக்கு மகாதீரையும் சந்தித்தார் மாமன்னர். மகாதீரின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டதோடு, அவரை இடைக்காலப் பிரதமராக நியமிக்கும் முடிவையும் எடுத்தார் மாமன்னர்.

ஆக, இன்று காலையில் மகாதீரை நேரடியாகச் சந்தித்து பிரச்சனைகளைச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள அன்வார் எடுத்த முடிவுதான் – அதைத் தொடர்ந்த அவர்கள் இருவரின் சந்திப்புதான் – ஆட்சி மாற்ற முடிவை பிசுபிசுக்கச் செய்து, மலேசியாவின் அரசியல் சூழ்நிலையையே திசை திருப்பி விட்டது எனலாம்!

-இரா.முத்தரசன்