கோலாலம்பூர் : நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ ஹாமிட் பாடோர் – இந்திரா காந்தி இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை நிகழாமல் போனது சம்பந்தப்பட்ட தரப்புகளை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது.
எதிர்வரும் நவம்பரில் தீபாவளிக்கு முன்பாக தனது மகளுடன் இணைய முடியும் என தான் நம்பிக்கைக் கொண்டிருப்பதாக புக்கிட் அமான் காவல் துறை அதிகாரிகளைச் சந்தித்த பின்னர் இந்திரா காந்தி தெரிவித்தார்.
2009-ஆம் ஆண்டில் தனது 11 மாத மகள் பிரசன்னாவை அவர் கடைசியாகச் சந்தித்தார். அதன்பிறகு இன்னும் பிரசன்னா இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்படவில்லை.
தனது மகள் இஸ்லாமைத் தழுவ விரும்பினாலும் தனக்கு ஆட்சேபணையில்லை என இந்திரா காந்தி தெரிவித்தார்.
45 வயதான இந்திரா காந்தி, நேற்று புக்கிட் அமானுக்கு காவல் துறைத் தலைவருடனான சந்திப்புக்காக வந்திருந்தார்.
அவருடன் சமூகப் போராளி டத்தோ அம்பிகா சீனிவாசன், அவரது வழக்கறிஞர், அவருக்காகப் போராடும் இங்காட் குழுவின் தலைவர் அருண் துரைசாமி ஆகியோர் உடன் வந்தனர்.
எனினும் புத்ரா ஜெயாவில் மற்றொரு முக்கியக் கூட்டத்திற்குச் செல்லவிருந்ததால் ஐஜிபி இந்திரா காந்தி குழுவினரைச் சந்திக்கவில்லை.
மற்ற காவல் துறை அதிகாரிகளைச் சந்தித்த பின்னரும் காவல் துறையினர் மீது தங்களுக்கு நம்பிக்கை வரவில்லை என இந்திரா காந்தி தெரிவித்தார்.
உண்ணாவிரதப் போராட்டம் தொடருமா?
இந்திரா காந்தி தனது மகள் பிரசன்னா டிக்சாவைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறையினரின் தாமதத்தை கண்டிக்கும் வகையில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ அப்துல் ஹமீட் பாடோர் நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 3-ஆம் தேதி) காலை 9.00 மணிக்கு புக்கிட் அமான் தலைமையகத்தில் அவரைச் சந்திக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தற்போதைக்குக் கைவிடுவதாக இந்திரா காந்தி தெரிவித்தார். ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள்ளாக தங்களைச் சந்திக்க ஐஜிபி இணங்காவிட்டால் எதிர்வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி முதற்கொண்டு உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கவிருப்பதாக இந்திரா காந்தி அறிவித்திருந்தார்.
இந்திரா காந்தியின் போராட்டத்திற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் இங்காட் குழு (Indira Gandhi Action Team – Ingat) எனப்படும் “இந்திரா காந்தி நடவடிக்கைக் குழுவும்” உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்திரா காந்திக்குத் துணையாக களமிறங்கத் தயாராகி வந்தது.
இந்திரா காந்தியின் மகளைக் கண்டுபிடிக்க கடந்த 17 ஏப்ரல் 2019-இல் அமைக்கப்பட்ட காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவின் செயல்பாடுகள், மேலும் அண்மையில் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சின் சார்பாக வெளியிடப்பட்ட தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் செப்டம்பர் 3 சந்திப்புக் கூட்டத்தில் விளக்கங்கள் கோரப்படுவதாக இருந்தது.
தங்களுக்குக் கிடைத்திருக்கும் சில புலனாய்வுத் தகவல்களையும் தாங்கள் காவல் துறையினருடன் பகிர்ந்து கொள்ளவிருப்பதாக அருண் துரைசாமி தெரிவித்திருந்தார்.
“11 ஆண்டுகள், 5 காவல் துறைத் தலைவர்கள், மூன்று அரசாங்கங்கள் கடந்தும் கூட்டரசு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். செப்டம்பர் 3-ஆம் தேதி ஐஜிபியுடனான சந்திப்பு இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வைத் தரும் என நம்புகிறோம்” என்றும் அருண் துரைசாமி தனது ஏமாற்றத்தைப் பதிவு செய்திருந்தார்.
எனினும் நேற்றைய சந்திப்பில் புதிய தகவல்கள் ஏதும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் ஐஜிபியே கூட்டத்திற்கு வராததும் தங்களுக்கு பெருத்த ஏமாற்றம் என்றும் இந்திரா காந்தியும், அருண் துரைசாமியும் ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.
தங்களின் உண்ணாவிரதப் போராட்டம் இனியும் தொடருமா அல்லது ஒத்தி வைக்கப்படுகிறதா என்பது குறித்தும் இந்திரா காந்தி எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்திரா காந்தியின் தீராத போராட்டம்
எம். இந்திரா காந்தியின் முன்னாள் கணவரான முகமட் ரிட்சுவானை நாடு திரும்ப கோருவதற்காக காவல் துறையினர் ஓர் அரசியல்வாதியின் உதவியை நாடியுள்ளனர் என்றும் சில வாரங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியிடப்பட்டன.
“அவரது முன்னாள் கணவரை சரணடையச் செய்ய அரசியல்வாதியின் உதவியை நாங்கள் கோரியுள்ளோம். இது தொடர்கிறது, எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்து வருகிறோம்” என்று காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமீட் பாடோர் கூறியிருந்தார்.
இந்திரா காந்தியை தனது மகள் பிரசன்னா டிக்சாவுடன் மீண்டும் ஒன்றிணைக்கும் பணியை விரைவுபடுத்தும் முயற்சியில், தமது தரப்பு பொருத்தமான நடவடிக்கைகளை கவனித்து வருவதாக அப்துல் ஹமீட் தொடர்ந்து கூறி வருகிறார்.
தனது முன்னாள் கணவர் தப்பி ஓடிய பிறகு, இந்திராவின் நிலை மற்றும் தனது மகளிடமிருந்து பிரிந்த உணர்வுகள் குறித்து தனது தரப்பு தீவிரமாக எடுத்துக்கொண்டது என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் முகமட் ரிட்சுவான் அதிகாரிகளால் கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்காக அண்டை நாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது என்று நடந்து முடிந்த கூட்டத் தொடரில் தெரிவித்திருந்தது.
11 ஆண்டுகளுக்கு முன்பு பிரசன்னாவை கடத்திச் சென்றவர் இருக்கும் இடம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் உள்துறை அமைச்சு தெரிவித்தது.
இந்திராவின் முன்னாள் கணவரான முகமட் ரிட்சுவான் அப்துல்லா அண்டை நாட்டில் அதிகாரிகள் கண்டுபிடிப்பதைத் தவிர்ப்பதற்காக ஓரிடம் விட்டு ஓரிடத்திற்கு நகர்கிறார் என்றும் உள்துறை அமைச்சு குறிப்பிட்டிருக்கிறது.
“அவரது இருப்பிடத்தை அடையாளம் காண காவல் துறை அண்டை நாட்டில் உள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது” என்று உள்துறை அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி தெரிவித்திருந்தது.
நீதிமன்றத் தீர்ப்பை ஏற்காத முகமட் ரிட்சுவான்
2011-இல் மார்ச் 11 அன்று ஈப்போ உயர்நீதிமன்றம் தனது மூன்று குழந்தைகளை அவரது மனைவி இந்திராவிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்ட பிறகு, முகமட் ரிட்சுவான் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க காவல் துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
முகமட் ரிட்சுவானை தேடப்படும் நபராக அறிவித்ததை அடுத்து, அவர் இருக்கும் இடத்தைக் கண்டறியும் முயற்சியில் அவர் குடிநுழைவுத் துறையால் தடுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டது.
கே. பத்மநாதன் மார்ச் 2009- இல் இஸ்லாமிய மதத்தினை தழுவி முகமட் ரிட்சுவான் அப்துல்லா எனப் பெயர் மாறினார். மேலும் தனது மூன்று குழந்தைகளையும் ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றியுள்ளார். இது இந்திராவின் அனுமதியின்றி நடந்துள்ளது.
2009 – ஆம் ஆண்டில் 11 மாதமான அவர்களின் மகள் பிரசன்னா தீட்சாவுடன் முகமட் ரிட்சுவான் தப்பி ஓடிவிட்டார்.
2014-இல் முகமட் ரிட்சுவானுக்கு எதிராக கைது ஆணையையும் ஈப்போ உயர்நீதிமன்றம் பிறப்பித்தது.
முகமட் ரிட்சுவானைக் கைது செய்து பிரசன்னாவை மீட்டெடுக்க ஈப்போ உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு ஏற்ப செயல்படுமாறும் முகமட் ரிட்சுவானுக்கு எதிராகக் கைது ஆணை பிறப்பித்தும் 2016-ஆம் ஆண்டில், அப்போதைய காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபுபக்கருக்கு கூட்டரசு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
2018-இல் ஏகமனதாக வழங்கிய தீர்ப்பில் பெற்றோரில் ஒருவரின் சம்மதத்துடன் மட்டும் மேற்கொள்ளப்படும் குழந்தைகள் மீதான ஒருதலைப் பட்சமான மதமாற்றங்கள் சட்டபூர்வமாக செல்லாது என்றும் பெற்றோர்கள் இருவரின் சம்மதமும் மதமாற்றத்திற்குத் தேவை என்றும் கூட்டரசு நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த ஆண்டு ஜனவரியில், டான்ஸ்ரீ அப்துல் ஹமீட் பாடோர் மகளுடன் இந்திராவை மீண்டும் ஒன்றிணைப்பதில் ஒரு “மகிழ்ச்சியான முடிவை” நோக்கி விடாமுயற்சியுடன் செயல்படுவதாகக் கூறியிருந்தார்.