Home இந்தியா நட்சத்திர வேட்பாளர்கள்: வென்றவர்கள் யார்? வீழ்ந்தவர்கள் யார்? (தொகுப்பு # 1)

நட்சத்திர வேட்பாளர்கள்: வென்றவர்கள் யார்? வீழ்ந்தவர்கள் யார்? (தொகுப்பு # 1)

814
0
SHARE
Ad

(அண்மையில் நடைபெற்று முடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள் சிலர்  போட்டியிட்ட நட்சத்திரத் தொகுதிகளின் வரிசையை செல்லியலில் வெளியிட்டோம். அவர்களில் வென்றவர்கள் யார்? வீழ்ந்தவர்கள் யார்? செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கும் ஒரு கண்ணோட்டம்)

#1 – சிவகங்கை – தந்தையின் இடத்தைப் பிடித்த கார்த்தி சிதம்பரம்

பல தவணைகள் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெற்றி பெற்றும் சில தடவைகள் தோல்வியுற்றும் வந்த தொகுதி சிவகங்கை. இந்த முறை அவரது தனயன் கார்த்தி சிதம்பரம் கடும் போட்டிக்கிடையில் வெற்றி பெற்றிருக்கிறார்.

அவரை எதிர்த்து நின்ற பாஜகவின் ஹெச்.இராஜா, மக்கள் நீதி மய்யத்தின் சிநேகன், ஆகியோரைத் தோற்கடித்து 332,244 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் கார்த்தி.

#TamilSchoolmychoice

தன்னைச் சுற்றி நிற்கும் வழக்குகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினராகப் போராடி வென்றிருக்கிறார் கார்த்தி.

#2 – தூத்துக்குடியைத் ‘தூக்கினார்’ கனிமொழி

தமிழ்நாட்டின் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி அனைவராலும் கவனிக்கப்பட்ட இன்னொரு தொகுதியாகும். ஆளும் அதிமுக, பாஜகவுக்கு எதிராக உச்சகட்ட எதிர்ப்பு அலை வீசிய இந்தத் தொகுதியில் எதிர்பார்த்தது போலவே கனிமொழி, தமிழிசை சௌந்தரராஜனை வீழ்த்தினார்.

560,345 வாக்குகள் பெற்ற கனிமொழி, 345,848 பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த வெற்றியைத் தொடர்ந்து திமுக நாடாளுமன்றக் குழுவுக்கு துணைத் தலைவராகவும் அவரை நியமித்திருக்கிறார் ஸ்டாலின்.

# 3 – மதுரையைக் கைப்பற்றிய சாகித்திய அகாடமி எழுத்தாளர்

“வீரயுக நாயகன் வேள்பாரி” என்ற தமிழர்களின் பழம்பெருமைகளைக் கூறும் வரலாற்று நாவலை ஆனந்த விகடனில் எழுதி புகழ்பெற்ற சு.வெங்கடேசன் ஏற்கனவே “காவல் கோட்டம்” என்ற தனது இன்னொரு வரலாற்று நாவலுக்காக சாகித்திய அகாடமி விருதைப் பெற்றவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக, திமுக கூட்டணியில் போட்டியிட்ட இவர், 444,152 வாக்குகள் பெற்று மதுரையைக் கைப்பற்றினார். தமிழர்களின் தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சி குறித்து நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வரும் வெங்கடேசனின் குரல் இனி, தமிழர்களுக்காக நாடாளுமன்றத்திலும் ஒலிக்கும்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் ராஜ் சத்யன் 307,033 வாக்குகள் பெற, 137,119 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிக் கனியைப் பறித்திருக்கிறார் வெங்கடேசன்.

# 4 – சினிமாக் கவர்ச்சி ஜெயப் பிரதாவுக்குக் கைகொடுக்கவில்லை

உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் ஏற்கனவே ஓரிரு தவணைகள் வெற்றி பெற்றிருந்த பிரபல நடிகை ஜெயப்பிரதா மீண்டும் இங்கே பாஜக வேட்பாளராக போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியவில்லை.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றிருந்தாலும் அவரது சினிமாக் கவர்ச்சி கைகொடுக்கவில்லை. 42.34 விழுக்காடு வாக்குகளை மட்டுமே அவர் பெற, அவரை எதிர்த்து சமஜ்வாடி கட்சியின் சார்பில் போட்டியிட்ட முகமட் அசாம் கான் 52.71 விழுக்காட்டு வாக்குகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

# 5 – மதுராவை மீண்டும் கைப்பற்றினார் ஹேமமாலினி

உத்தரப் பிரதேசத்திலுள்ள மதுரா நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட தமிழ்ப் பெண் ஹேமமாலினி மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். இந்திப் பேசும் மக்களைக் கொண்ட மைய மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தில் ஒரு தமிழ்ப் பெண் வெற்றி பெற்றதற்குக் காரணம் சொல்லத் தேவையில்லை – சினிமாக் கவர்ச்சி!

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராஷ்டிரிய லோக் டால் கட்சி வேட்பாளரை விட 3 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் ஹேமமாலினி.

இந்தமுறை ஹேமமாலினி குடும்பத்திலிருந்து இன்னொருவரும் நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார். ஹேமமாலினியின் கணவர் தர்மேந்திராவின் முதல் மனைவியின் மகனும் நடிகருமான சன்னி டியோல் பாஜக வேட்பாளராக பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

# 6 – “ரங்கீலா” புகழ் ஊர்மிளாவுக்கு காங்கிரஸ் கைகொடுக்கவில்லை

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை வடக்குப் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறக்கப்பட்டவர் ‘ரங்கீலா’ படத்தின் மூலம் புகழின் உச்சியைத் தொட்ட ஊர்மிளா மதோண்ட்கர்.

ஊர்மிளாவை சினிமாவில் கொண்டாடிய இரசிகர்கள் அரசியலில் கைவிட்டு விட்டார்கள். காரணம், மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த முறை பாஜக-சிவசேனா கூட்டணி பக்கம் வீசிய ஆதரவு அலை. மொத்தமுள்ள 48 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக-சிவசேனா இணை 41 தொகுதிகளைக் கைப்பற்ற காங்கிரஸ் கூட்டணி 5 தொகுதிகளை மட்டுமே வென்றது.

அந்த அலையில் 460,000 மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் படுமோசமான தோல்வியைத் தழுவினார் ஊர்மிளா.

# 7 – அரசியலிலும் விளாசினார் கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர்

கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர் பாஜக சார்பில் போட்டியிட்ட தொகுதி கிழக்கு டில்லி. இந்திய அணிக்கு விளையாடி பந்துகளாக விளாசித் தள்ளிய கௌதம் அரசியலிலும் சாதிப்பாரா எனக் காத்திருந்தனர் அவரது இரசிகர்கள்.

இந்த முறை டில்லியில் உள்ள 7 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் அளவுக்கு இந்தியத் தலைநகரில் அந்தக் கட்சியின் அலை வீசியது. அந்த அலையில் கௌதம் காம்பீரும் வெற்றிக் கொடி நாட்டி விட்டார்.

# 8 – அரவக் குறிச்சி வாக்காளர்கள் செந்தில் பாலாஜியைத் தழுவிக் கொண்டனர்

தமிழ் நாட்டின் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அனைவரும் உன்னிப்பாகப் பார்த்தது அரவக்குறிச்சி தொகுதியை.

அதிமுகவிலிருந்து விலகி, டிடிவி தினகரனின் அமமுக பக்கம் போன செந்தில் பாலாஜி, பின்னர் அங்கிருந்து இன்னொரு பல்டி அடித்து திமுகவில் இணைந்தார். மீண்டும் அவருக்கு அரவக் குறிச்சி தொகுதியே போட்டியிட திமுக தலைமையால் ஒதுக்கப்பட்டது. இந்த கட்சி மாற்றங்களினால், வாக்காளர்கள் அவரைத் தண்டிப்பார்களா, தழுவிக் கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறித் கிடந்தது அரவக் குறிச்சி தொகுதியில்.

செந்தில் பாலாஜி பரவலான எதிர்பார்ப்புக்கு ஏற்ப மீண்டும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இதன் மூலம் தான் புதிதாக இணைந்துள்ள திமுகவில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளார் செந்தில் பாலாஜி.

# 9 – தேனி: அதிமுக மானத்தைக் காப்பாற்றிய ஓபிஎஸ் மகன்

 

தேனி நாடாளுமன்றத்திற்கான அதிமுக வேட்பாளர் – ஓபிஎஸ் மகன் – ரவீந்திர குமார்

தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கான போட்டி உண்மையிலேயே தமிழகத்தின் நட்சத்திர அரசியல்வாதிகளின் சங்கமமாகத்தான் இருந்தது.

ஒருபக்கம் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திர குமார், இன்னொரு பக்கம் காங்கிரசின் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், இன்னொரு பக்கம் அமமுகவின் அதிரடித் தலைவர்களில் ஒருவரான தங்கத் தமிழ்ச் செல்வன் ஆகிய மூவரும் மோதிய தொகுதி இது.

ரவீந்திர குமார் இங்கு அதிமுக வேட்பாளராகக் களமிறக்கப்பட்டது தொடக்கம் முதலே அதிமுக வட்டாரங்களில் பலத்த எதிர்ப்பை தேடிக் கொடுத்தது. ஆனால், இறுதியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் இந்தத் தேனி தொகுதியில் மட்டும் வென்று அதிமுகவின் மானத்தைக் காப்பாற்றினார் ரவீந்திரகுமார்.

76 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வென்றிருப்பதன் மூலம் ரவீந்திரகுமார் பாஜக அமைச்சரவையில் இடம் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வத்தின் கையும் அதிமுக கட்சி வட்டாரத்தில் ஓங்கியுள்ளது.

# 10 – தென் சென்னையைக் கைப்பற்றி நாடாளுமன்றம் செல்லும் கவிதாயினி தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழ் இலக்கிய வட்டாரங்களில் கவிதாயினியாகப் புகழ்பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் திமுக வேட்பாளராக தென் சென்னையில் களமிறக்கப்பட்டபோதே, படித்தவர்கள் நிறைந்த இந்தத் தொகுதியில் ஈர்ப்பு மிக்க அவரது தோற்றத்தினாலும், அறிவாற்றலாலும் வெற்றி வாகை சூடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

எனினும், அதிமுக சார்பில் இங்கு போட்டியிட்ட அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்த்தன் கடும் போட்டியை வழங்கினார். இறுதியில் 262,000 -க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடி இந்திய நாடாளுமன்றத்தில் காலடி வைக்கப்போகிறார் இந்தக் கவிதை மகள்.

இந்த முறை திமுக சார்பில் வென்று நாடாளுமன்றம் செல்லும் இரண்டு பெண்களுமே கவிஞர்கள் (கனிமொழி, தமிழச்சி) என்பது திமுகவுக்கும், தமிழ் நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் பெருமை!

-இரா.முத்தரசன்