Home One Line P1 செல்லியல் பார்வை : சபா தேர்தல் – ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்!

செல்லியல் பார்வை : சபா தேர்தல் – ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்!

766
0
SHARE
Ad

(25 செப்டம்பர் 2020-ஆம் நாள் “செல்லியல் பார்வை காணொலி” தளத்தில் இடம் பெற்ற “சபா தேர்தல் – ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்!” காணொலியின் கட்டுரை வடிவம்)

சபா மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு முதலமைச்சர் ஷாபி அப்டாலுக்கு இருக்கும் சாதகமான அம்சங்களின் வரிசையை ஏற்கனவே பார்த்தோம்.

அதே வேளையில் மீண்டும் சபா முதலமைச்சராக அமர்வதற்கு, ஷாபி அப்டாலுக்கு எதிராக எழுந்து நிற்கும் சவால்கள் சிலவற்றையும் பார்ப்போம்.

சவால் # 1 : பல்முனைப் போட்டிகள் வாக்குகளைப் பிரிக்கலாம்

இந்த முறை சபா மாநிலத்தில் பல்வேறு கட்சிகள் தங்களின் சொந்த சின்னத்தில் போட்டியிடுகின்றன. இதனால் பல தொகுதிகளில் பல்முனைப் போட்டிகள் நிலவுகின்றன.

#TamilSchoolmychoice

குறைந்த பட்சம் மும்முனைப் போட்டி என்பதில் தொடங்கி அதிக பட்சம் 11 வேட்பாளர்கள் வரை ஒரு தொகுதியில் மோதுகின்றனர்.

பொதுவாக இது போன்ற பல்முனைப் போட்டிகளால் ஷாபிக்கு எதிரான வாக்குகள் பிரிகின்றன – அதனால் அவருக்கு சாதகம்தான் என்ற கருத்து நிலவுகிறது.

ஆனால், எல்லாத் தொகுதிகளிலும் இந்த சாதகம் வாரிசான் கட்சிக்கு இருக்கும் எனக் கூறமுடியாது.

பல தொகுதிகளில் வாரிசான் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றது.

இதனால் இந்த முறை நிலவும் பல்முனைப் போட்டிகளால் நேர்மாறாக, வாரிசான் கட்சிக்குக் கிடைக்கக் கூடிய வாக்குகள், மற்ற கட்சிகளால் பிரிக்கப்படும் அபாயமும் நிலவுகின்றது.

குறிப்பாக செல்வாக்கு பெற்ற பல சபா உள்ளூர் கட்சிகள் தங்களின் சொந்த சின்னங்களில் போட்டியில் குதித்துள்ளன.

பிபிஎஸ், ஸ்டார், எல்டிபி, பிசிஎஸ் போன்ற உள்ளூர் கட்சிகள் அவர்களுக்கே உரிய சில பாரம்பரியத் தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது.

எனவே, பல்முனைப் போட்டிகளால் வாரிசான் கட்சி இலாபம் அடையுமா அல்லது இத்தகையப் போட்டிகளால் வாரிசானுக்கே பாதிப்பு நேருமா என்பது தேர்தல் முடிவுகளை வைத்துத்தான் கணிக்க முடியும்.

சவால் # 2 : முகமடின் கெத்தாபி கருத்தால் வாரிசான் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு

எல்லாமே வாரிசான் சபா கட்சிக்கு சாதகமாகப் போய்க் கொண்டிருந்த நிலையில் வானில் போகிற சனியை ஏணி வைத்து இறக்கிய கதையாக வாரிசானின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமடின் கெத்தாபி சில சர்ச்சைக் கருத்துகளை உதிர்த்திருக்கிறார்.

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் இவர் அமைச்சராகவும் இருந்தார்.

2013-இல் சபா தண்டூவா என்ற இடத்தில் நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய பயங்கரவாத ஊடுருவல் அம்னோ நடத்திய நாடகம் என்ற தொனியில் அவர் பேசியிருப்பது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இராணுவத்தினர், காவல் துறையினரின் முன்கூட்டிய வாக்குப் பதிவு நடைபெற்ற செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு ஒருநாள் முன்னதாக முகமடின் கெத்தாபியின் சர்ச்சைக் கருத்து ஊடகங்களில் வெடித்தது.

இதனால் முன்கூட்டிய வாக்குப் பதிவு ஷாபி அப்டாலுக்கு ஆதரவாக இருக்காது என்ற கருத்தும் நிலவுகிறது.

முகமடின் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். ஷாபி அப்டாலும் அந்தக் கருத்து திரித்துக் கூறப்பட்டது என மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

இதிலிருந்தே அந்த சர்ச்சைக் கருத்து வாக்காளர்கள் மத்தியிலும் பாதுகாப்புப் படையினர் மத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணரலாம்.

தேர்தல் நெருக்கத்தில் இந்த சர்ச்சைக் கருத்து மேலும் தீவிரமாக ஷாபி அப்டாலுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம்.

சவால் # 3 : ஷாபி ஒரு வந்தேறி என்ற பிரச்சாரம்

ஷாபி அப்டால் மீது தொடர்ந்து சுமத்தப்படும் அரசியல் குற்றச்சாட்டு, அவர் அயல் நாட்டிலிருந்து வந்தவர். பிலிப்பைன்ஸ் நாட்டு மூதாதையர்களைக் கொண்டவர் என்பது.

அம்னோவில் இருந்தவரை ஷாபி மீது சுமத்தப்படாத இந்த எதிர்ப் பிரச்சாரம் இப்போது வலுவடைந்துள்ளது. சபாவின் பூர்வ குடியினரான கடாசான், டூசுன், மூருட் இன மக்களிடையே இந்தப் பிரச்சாரம் தீவிரமாகப் பரப்பப்படுகிறது.

“எனது மூதாதையர்களின் கல்லறைகள் இன்னும் செம்பூர்ணாவில் இருக்கின்றன. மூசா அமானின் பாட்டனார், பாட்டி கல்லறைகள் எங்கிருக்கின்றன? காட்ட முடியுமா?” என சவால் விடுத்திருக்கிறார் ஷாபி.

“அம்னோவில் இருந்தவரை நான் சபா பூர்வ குடியினராகத் தெரிந்தேன். இன்று அம்னோவை எதிர்ப்பதால் வந்தேறி, அயல்நாட்டுக்காரன் என்ற சாயம் பூசப்படுகிறது” என பதிலடி கொடுத்திருக்கிறார் ஷாபி.

இதுவும் அவருக்கு எதிராக எழுந்து நிற்கும் முக்கிய சவால்களில் ஒன்று!

சவால் # 4 : காபுங்கான் ராயாட் சபா சித்தாந்தம் சபா மக்களைக் கவருமா?

மொகிதின் யாசின், தேசியக் கூட்டணி, தேசிய முன்னணி இணைந்த கட்சிகளின் கூட்டணிக்கு “காபுங்கான் ராயாட் சபா” – ஜிஆர்எஸ் – என்னும் புதியதொரு சித்தாந்தத்தை சபா மக்களிடையே முன்வைத்திருக்கிறார்.

சரவாக் உள்ளூர் கட்சிகள் செயல்படுத்தியிருக்கும் காபுங்கான் பார்ட்டி சரவாக் -ஜிபிஎஸ் – என்பது போன்று காபுங்கான் ராயாட் சபா என்னும் ஜிஆர்எஸ், சபா மக்களிடையே எடுபடுமா? ஏற்றுக் கொள்ளப்படுமா?

இரண்டுக்கும் இடையிலான முக்கிய வித்தியாசம் ஒன்று உண்டு. சரவாக்கின் ஜிபிஎஸ் என்பது முழுக்க முழுக்க உள்மாநிலக் கட்சிகளைக் கொண்டது.

மொகிதின் யாசின் முன்வைத்திருப்பதோ, மேற்கு மலேசியக் கட்சிகளின் பெரும்பான்மையைக் கொண்ட அமைப்பு. சபாவிலோ மேற்கு மலேசியா கட்சிகளுக்கு எதிரான எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில் காபுங்கான் ராயாட் சபா எடுபடுமா?

இருப்பினும், தங்களுக்கிடையிலான உட்கட்சி மோதல்களை, மொகிதின் யாசின் காபுங்கான் ராயாட் சபா மூலம் சாமர்த்தியமாகப் பூசி மெழுகி மூடி மறைத்திருக்கிறார்.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சில தொகுதிகளில் மோதிக் கொண்டாலும், காபுங்கான் ராயாட் சபா கூட்டணி என்ற பெயரில் ஒருங்கிணைந்திருப்பது ஷாபி அப்டாலுக்கு முன் நிற்கும் மற்றொரு சவால்.

இந்த நான்கு முக்கிய சவால்களையும் ஷாபி முறியடித்து விட்டால் அவர் மீண்டும் சபா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவதில் தடைகள் இருக்காது.

அவர் மீண்டும் சபா முதலமைச்சராக ஆட்சிக் கட்டிலில் அமரவும் முடியும்.

செப்டம்பர் 23 பத்திரிகையாளர் சந்திப்பில் அன்வார்

இந்நிலையில் திடீர் திருப்பமாக புதன்கிழமை செப்டம்பர் 23-ஆம் தேதி ஆட்சி அமைப்பதற்கான மிகப் பெரிய பெரும்பான்மையைத் தான் பெற்றிருப்பதாக அன்வார் இப்ராகிம் அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பு ஷாபி அப்டாலுக்கு எதிராக நிற்கும் சவால்களை முறியடிப்பதில் அவருக்கு துணை நிற்கும். அவருக்கான ஆதரவை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

-இரா.முத்தரசன்

“சபா தேர்தல் – ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்!” என்ற இந்த இந்த செல்லியல் பார்வை கட்டுரையின் காணொலி வடிவத்தைக் கீழ்க்காணும் “செல்லியல் பார்வை காணொலி” இணைப்பில் காணலாம்: