Home One Line P1 ஒஸ்மான் சபியான் பெர்சாத்து கட்சியில் இன்னும் நீடிக்கிறார்

ஒஸ்மான் சபியான் பெர்சாத்து கட்சியில் இன்னும் நீடிக்கிறார்

662
0
SHARE
Ad

ஜோகூர் பாரு :ஜோகூர் முன்னாள் மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான் பெர்சாத்து கட்சியிலிருந்து இன்னும் நீக்கப்படவில்லை மாறாக இன்னும் அவர் பெர்சாத்து உறுப்பினராகத் தொடர்கிறார் என அக்கட்சியின் ஒழுங்கு நவடிக்கைக் குழு தெளிவுபடுத்தியிருக்கிறது.

சிலிம் இடைத் தேர்தலின்போது துன் மகாதீரின் பெஜூவாங் கட்சியினரோடு இணைந்து காணப்பட்டது, அவர்களின் வெற்றிக்காக முழக்கமிட்டது ஆகிய காரணங்களுக்காக அவரது உறுப்பியம் பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டது இன்று முதலில் அறிவிப்பு வெளியானது.

அவரது உறுப்பிய நீக்கத்தை பெர்சாத்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் மெகாட் நஜ்முடின் மெகாட் காஸ் உறுதிப்படுத்தியிருந்தார்.

#TamilSchoolmychoice

ஆனால், இந்தச் செய்தி ஊடகங்களில் வெளிவந்த பின்னர் மெகாட் நஜ்முடின் மெகாட் காஸ் மறுப்பு தெரிவித்து சில விளக்கங்கள் அளித்திருக்கிறார்.

“சிலிம் இடைத் தேர்தலில் உண்மையிலேயே பெஜூவாங் கட்சிக்காக ஒஸ்மான் சபியான் பிரச்சாரம் செய்திருந்தால், அவரது உறுப்பியம் பெர்சாத்து கட்சியிலிருந்து இயல்பாகவே நீக்கப்பட்டதாகக் கருதப்படும் என்றுதான் நான் கூறினேன். மாறாக அவர் அந்தக் குற்றத்தை செய்ததாக இதுவரையில் ஆதாரம் எதுவும் காட்டப்படவில்லை. ஒஸ்மானும் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார்” என மெகாட் நஜ்முடின் விளக்கினார்.

கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினரான ஒஸ்மான் சபியான் பெர்சாத்து கட்சியின் சார்பில் முன்னாள் மந்திரி பெசாராக இருந்தவர். டான்ஸ்ரீ மொகிதின் – அஸ்மின் அலி இருவரின் “ஷெராட்டன் நகர்வு” காரணமாக ஜோகூர் மாநில நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கமும் கவிழ்ந்தது.

அதைத் தொடர்ந்து தற்போது அம்னோவின் ஹாஸ்னி பின் ஹாஜி முகமட் (படம்), தேசியக் கூட்டணி சார்பிலான ஜோகூர் மாநில அரசாங்கத்திற்கு மந்திரி பெசாராக பதவியேற்றார்.

ஜோகூர் அரசாங்கம் கவிழுமா?

தேசிய முன்னணி, பாஸ், பெர்சாத்து இணைந்த ஜோகூர் தேசியக் கூட்டணி 29 தொகுதிகளோடு மாநிலத்தை ஆட்சி செய்து வருகிறது. மொத்தமுள்ள 56 தொகுதிகளில் 27 தொகுதிகள் நம்பிக்கைக் கூட்டணி வசம் இருக்கின்றன.

இந்நிலையில் ஒஸ்மான் சபியான் பெர்சாத்துவில் இருந்து நீக்கப்பட்டால் தேசியக் கூட்டணியின் சட்டமன்ற பலம் 29-இல் இருந்து 28 ஆகக் குறையும்.

ஒஸ்மான் சபியான் தனது நிலைப்பாட்டை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எனினும் தான் பெர்சாத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டால் எதிரணியினருக்கே ஆதரவு என முன்பு ஒருமுறை அறிவித்திருந்தார்.

அவர் தனது ஆதரவை நம்பிக்கைக் கூட்டணிக்குத் தெரிவித்தால், இரு அணிகளும் சரி சமமாக 28-28 என சமபலம் கொண்டிருக்கும்.

ஆட்சியும் ஆட்டம் கண்டு விடும்.

ஜோகூர் மாநிலத்தில் கட்சித்தாவல்கள் மீண்டும் அரங்கேறினால், சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிய தேர்தலுக்கு வழிவிடுவேன் என ஜோகூர் சுல்தான் இப்ராகிம் ஏற்கனவே எச்சரித்திருக்கிறார்.

சிலிம் பிரச்சாரத்தில் ஒஸ்மான் சபியான்

கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) சிலிம் தொகுதி இடைத் தேர்தலின்போது  பெல்டா துரோலாக் செலாத்தான் தேர்தல் நடவடிக்கை அறைக்கு வருகை தந்த முன்னாள் மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான் அங்கு மகாதீரோடு காணப்பட்டார்.

அந்த சமயத்தில் பெஜூவாங் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் அமிர் குஷாயிரி முகமட் தனுசிக்கு ஆதரவாக ஒஸ்மான் சபியான் முழக்கமிடும் காணொளிக் காட்சிகளும் சமூக ஊடகங்களில் பரவின.

எனினும் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அங்கு நண்பர்களை சந்திக்க மட்டுமே வந்தேன் என்று கூறியதாகவும், பிரச்சாரம் செய்ய வரவில்லை, வெறுமனே பார்வையிடவே வந்தேன் என்றும் கூறியதாகவும் மலேசியாகினியின் செய்தி ஒன்று தெரிவித்தது.

கடந்த சனிக்கிழமை ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெற்ற பெர்சாத்து கட்சித் தேர்தலில் உச்சமன்றக் குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் ஒஸ்மான் சபியான் தோல்வியடைந்தார்.

கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஜோகூர் மாநிலத்திற்கு வருகை தந்தபோது மொகிதின் யாசின் தேசியக் கூட்டணி உறுப்பியக் கட்சிகளின் தலைவர்களை இரவு விருந்து ஒன்றில் சந்தித்தார். அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வண்ணம் இரகசியமாக – மூடிய கதவுகளுக்குப் பின்னால் – மொகிதினின் அந்த சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

செப்டம்பர் 10 – பலப்பரிட்சை

எதிர்வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி ஜோகூர் மாநில சட்டமன்றத்தின் இரண்டு நாள் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

ஜோகூர் மாநில சட்டமன்றத்தின் அவைத் தலைவராக தற்போது அமானா கட்சியின் ஷைசான் கையாட் செயல்படுகிறார்.

எதிர்வரும் சட்டமன்றக் கூட்டத்திற்கான தீர்மானங்கள் எதையும் தான் இன்னும் பெறவில்லை என்றும் ஷைசான் கையாட் தெரிவித்திருக்கிறார்.

அந்த சட்டமன்றக் கூட்டத்தின்போது அவைத் தலைவரை நீக்கும் தீர்மானத்தை தேசியக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டுவருவார்கள் என்றும் ஆரூடங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

அவ்வாறு கொண்டு வரப்பட்டால், தேசியக் கூட்டணிக்கும், நம்பிக்கைக் கூட்டணிக்கும் இடையில் யாருக்குப் பெரும்பான்மை என்பதை நிர்ணயிக்கும் பலப்பரிட்சைக் களமாக அன்றைய சட்டமன்றக் கூட்டம் அமையக் கூடும்!