Home One Line P1 அன்வார் அறிவிப்பு : அரசியல் விளைவுகளும் – மொகிதின் யாசின் எடுக்கக்கூடிய முடிவுகளும்!

அன்வார் அறிவிப்பு : அரசியல் விளைவுகளும் – மொகிதின் யாசின் எடுக்கக்கூடிய முடிவுகளும்!

637
0
SHARE
Ad

(செல்லியல் நிருவாக ஆசிரியர், இரா.முத்தரசன் எழுதிய இந்தக் கட்டுரை 25 செப்டம்பர் 2020-ஆம் நாள் மக்கள் ஓசை நாளிதழில் வெளியிடப்பட்டது)

கடந்த சில வாரங்களாக மலேசிய அரசியல் களத்தில் காற்றுவாக்கில் உலவிக் கொண்டிருந்த வதந்தி புதன்கிழமை செப்டம்பர் 23-ஆம் நாள் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அடுத்த அரசாங்கத்தை அமைத்து பிரதமர் ஆகக்கூடிய மிகத்தெளிவான நாடாளுமன்றப் பெரும்பான்மை பலம் தனக்கு இருப்பதாக பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அறிவித்திருக்கின்றார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்படப் போகும் அரசியல் பின்விளைவுகள் சிலவற்றைப் பார்ப்போம்.

விளைவு # 1 : சபா தேர்தலில் ஷாபி அப்டாலின் வாரிசான் கட்சிக்கு ஆதரவு அதிகரிக்கும்

#TamilSchoolmychoice

சபா தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக அன்வாரின் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது, சபா அரசியலோடு தொடர்புடைய ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

அன்வாருக்கு உண்மையிலேயே அவர் கூறுவது போல பெரும்பான்மை பலம் எதுவும் இல்லை, மாறாக சபா சட்டமன்றத் தேர்தலில் ஷாபி அப்டால் வெற்றிபெற உதவுவதற்காகவே இவ்வாறு அறிவித்திருக்கிறார் என ஒரு சில தரப்பினர் கூறுகின்றனர்.

ஆனால் தானே அடுத்த பிரதமர் எனக் கூறும் அன்வார், சபா தேர்தலில் ஷாபி அப்டால் வெற்றிக்காக மட்டும் இப்படியெல்லாம் தனது அரசியல் நாணயத்தைப் பணயம் வைக்கமாட்டார்.


காண்க : செல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன?


செப்டம்பர் 23 பத்திரிகையாளர் சந்திப்பில் அன்வார்

முதலில் அன்வாரைப் போன்ற செல்வாக்கு பெற்ற ஒரு தலைவர் தனக்கு உண்மையிலேயே பெரும்பான்மை பலம் இல்லாவிட்டால், அதற்கான ஆதாரங்கள் இல்லாவிட்டால், இப்படிப்பட்ட ஓர் அறிவிப்பை வெளியிடவே மாட்டார்.

ஆனால், சபா தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்த அறிவிப்பை அன்வார் வெளியிட்டதற்கு மறைமுகமாக ஷாபிக்கு உதவ வேண்டும் என்ற வியூகமும் அதில் ஒளிந்திருக்கிறது.

சபாவில் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்த மொகிதின் யாசின் மத்திய அரசாங்கத்தோடு இணக்கமாக செயல்படக்கூடிய மாநில அரசாங்கத்தை தேர்ந்தெடுங்கள் என சபா மக்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

“நானே பிரதமர்! எனவே, என்னுடன் இணைந்து வாருங்கள். மலேசியாவை முன்னேற்றுவதற்கு என் பின்னால் வந்தால்தான் முடியும்” என்றெல்லாம் பிரச்சாரக் கூட்டங்களில் மொகிதின் யாசின் தன்னம்பிக்கையோடு முழங்கினார்.

மொகிதினின் இந்தப் பிரச்சார யுக்தியை அன்வாரின் அறிவிப்பு ஒரே நொடியில் தகர்த்து விட்டது.


காண்க : செல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்!


அதற்கு உதாரணம், அன்வாரின் அறிவிப்பு வெளியான அன்று மாலையே பிரச்சாரத்திற்காக சபா வந்தடைந்த பிரதமரின் தொனி முற்றிலும் மாறியிருந்ததுதான்.

“நான்தான் இன்னும் பிரதமர். அன்வார் தனது பெரும்பான்மையை உரிய முறையில் நிரூபிக்கும் வரை நான்தான் பிரதமர்” என தொனி இறங்கி, தன்னைத் தானே பிரதமர் என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய – தனது பிரச்சார முழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய – நெருக்கடிக்கு மொகிதின் தள்ளப்பட்டார்.

இது ஷாபி அப்டாலுக்கே சாதகம். அடுத்து அமையவிருக்கும் அன்வார் தலைமையிலான அரசாங்கம், ஷாபி அப்டாலுக்கே ஆதரவான அரசாங்கம் என்பது போன்ற தோற்றம் தற்போது சபா வாக்காளர்களிடையே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

2013-இல் சபா தண்டூவா என்ற இடத்தில் நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய பயங்கரவாத ஊடுருவல் அம்னோ நடத்திய நாடகம் என்ற தொனியில் வாரிசான் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமடின் கெத்தாபி சில நாட்களுக்கு முன் சர்ச்சைக் கருத்துகளை உதிர்த்திருந்தார்.

அதனால் ஷாபி அப்டால் கட்சியின் செல்வாக்கு சற்றே சரிந்ததும் உண்மை. அதனைச் சரிப்படுத்தும் விதத்திலும், திசை திருப்பும் விதத்திலும் அமைந்திருக்கிறது அன்வாரின் அரசாங்க மாற்ற அறிவிப்பு.

எனவே சனிக்கிழமை நடைபெறும் சபா சட்டமன்ற தேர்தலில் வாரிசான் வெற்றிபெற்றால் அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அன்வாரின் அரசாங்க மாற்ற அறிவிப்பு விளங்கும்.

விளைவு # 2 : தேசிய முன்னணி-தேசியக் கூட்டணிக் கட்சிகளிடையே முரண்பாடுகள் – மோதல்கள்

அன்வாரின் அறிவிப்பைத் தொடர்ந்து அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி விடுத்திருக்கும் அறிவிப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அம்னோ – தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாரை ஆதரிக்க முன்வந்தால் அதற்கு நாங்கள் தடையாக இருக்க மாட்டோம் என்றார் சாஹிட்.

இதைத் தொடர்ந்து அன்வாருக்கு ஆதரவாக பின்னணியில் சாஹிட்டும், நஜிப்பும் இருக்கிறார்கள் என்ற ஐயமும் எழுந்திருக்கிறது. மகாதீரும் இதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து அரசாங்கத்தின் தூணாக இருந்து தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் தேசிய முன்னணி-அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்பாக இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் மஇகாவின் நிலைமை என்ன? மசீச நிலைமை என்ன? என்ற கேள்விகளும் எழத் தொடங்கியிருக்கின்றன.


காண்க : செல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன?


தேசிய முன்னணி, அம்னோ, பாஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கிடையே முரண்பட்ட கருத்துக்களும் மாறுபட்ட பார்வைகளும் அன்வாரின் அறிவிப்பைத் தொடர்ந்து வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

அந்த வகையில் ஒற்றுமையாக இயங்கிக்கொண்டிருப்பது போல் தோற்றம் தந்த தேசிய முன்னணி-தேசியக் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே பிளவையும், கருத்து மோதல்களையும் ஏற்படுத்தியிருப்பது அன்வார் அறிவிப்பினால் நிகழ்ந்திருக்கும் மற்றொரு முக்கிய விளைவு.

மொகிதின் யாசின் எடுக்கப் போகும் முடிவுகள் என்ன?

அன்வாரின் அறிவிப்பு வெளியான அடுத்த இரண்டரை மணி நேரத்தில் மொகிதின் யாசினின் முக்கிய உரை இடம் பெறும் என்றதும் அரசியல் பரபரப்பு மேலும் கூடியது.

ஆனால், கொவிட்-19 நிதி உதவித் திட்டங்களை மட்டுமே மொகிதின் உரை கொண்டிருந்தது.

தொடர்ந்து பிரதமர் துறை அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. உரிய முறையில் அன்வார் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை மொகிதின்தான் அதிகாரபூர்வ பிரதமர் என அந்த அறிக்கை தெரிவித்தது.

இப்போதைக்கு அனைவரும் காத்திருப்பது மாமன்னர் அன்வார் இப்ராகிமைச் சந்திப்பாரா?

அப்படியே சந்தித்தாலும் எப்போது சந்திப்பார்? என்பதுதான்!

அன்வாரின் அரசாங்க மாற்ற அறிவிப்பை தொடர்ந்து அரண்மனையும் அவரைச் சந்திக்க மாமன்னர் அனுமதி தந்ததாக தெரிவித்திருக்கின்றது.

எனவே, மாமன்னர் குணமடைந்ததும் அன்வாரைச் சந்திப்பதைத் தவிர்க்க மாட்டார் என்றே கருதப்படுகிறது. எனினும், அரசியல் சார்பு குறைகூறல்கள் வந்துவிடக் கூடாது என்பதற்காக சபா தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே மாமன்னர் அன்வாரைச் சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தகைய சந்திப்பின்போது தனது நாடாளுமன்ற பெரும்பான்மையை அன்வார் நிரூபித்துவிட்டால் மொகிதின் எடுக்கப் போகும் முடிவுகள் என்னவாக இருக்கும்?

மொகிதின் யாசின் முன் இருக்கும் இரண்டு தேர்வுகள்

இரண்டு தேர்வுகள் இன்றைய நிலையில் பிரதமர் மொகிதின் யாசின் முன்னே இருக்கின்றன!

முதலாவது கண்ணியமாக அன்வாருக்கு வழிவிட்டு, ஜனநாயக மரபுப்படி, பிரதமர் பதவியில் இருந்து விலகிக் கொள்வது! அடுத்த பிரதமராக அன்வார் நியமனம் பெற அனைத்து வழிகளிலும் தனது ஒத்துழைப்பை வழங்குவது!

அப்படி இல்லாமல் அன்வாரின் முடிவை எதிர்க்கத் துணிந்தால் மொகிதின்  அதிரடியாக இன்னொரு முடிவை எடுக்கக்கூடும்!

அது என்னவென்றால் சில மாதங்களுக்கு முன்னர் தன்னை ஆதரித்த அதே  நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் இப்பொழுது தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அன்வாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதை மாமன்னரிடம் மொகிதின் சுட்டிக்காட்டலாம்.

அடுத்த சில மாதங்களில் இதே நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறொருவரை பிரதமராக்க ஏன் தங்கள் ஆதரவை மீண்டும் மாற்றிக் கொள்ள முன்வரமாட்டார்கள் என்ற கேள்வியையும் மொகிதின் மாமன்னரின் முன்வைக்கலாம்.

எனவே இந்த கட்சித் தாவல்கள், மாறி மாறி பிரதமர் ஒருவருக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாடுகளை ஒரேயடியாக முடிவுக்குக் கொண்டுவர நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு 15-ஆவது பொதுத் தேர்தலுக்கு வழி விடுவதுதான் சிறந்த வழி என மொகிதின் மாமன்னரிடம் பரிந்துரைக்கலாம்!

அப்படி மொகிதின் யாசின் வலியுறுத்தும் பட்சத்தில்,

அதற்கேற்ப நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் மாமன்னருக்கு மட்டுமே உண்டு.

இப்போதைக்கு மொகிதின் முன் இருக்கும் இரண்டு தேர்வுகள் இவைதான்!

அதாவது, பெரும்பான்மையை நிரூபித்தால் நாடாளுமன்ற பாரம்பரிய வழக்கப்படி, அன்வாருக்கு வழிவிட்டு பிரதமர் பதவியில் இருந்து விலகுவது; அல்லது

இது போன்ற கட்சித் தாவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் 15-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பரிந்துரைப்பது!

அடுத்தது அன்வாரின் புதிய அரசாங்கமா?

அல்லது 15-வது பொதுத் தேர்தலா?

முடிவு மாமன்னரின் கையில்!

-இரா.முத்தரசன்