Home One Line P2 பில்லியன் கணக்கான தொழில்நுட்ப முதலீடுகள் இந்தியாவில் ஏன்?

பில்லியன் கணக்கான தொழில்நுட்ப முதலீடுகள் இந்தியாவில் ஏன்?

696
0
SHARE
Ad

புதுடில்லி – 2020-ஆம் ஆண்டு தொடங்கி உலகமே கொவிட்-19 பிரச்சனைகளில் மூழ்கியிருக்க மிகப் பெரிய முதலீடுகள் சத்தமின்றி இந்தியாவின் தொழில்நுட்பட நிறுவனங்களில் செய்யப்பட்டிருக்கின்றன.

அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவில் பெருமளவில் முதலீடு செய்திருக்கின்றன.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் மட்டும் கடந்த 2 மாதங்களில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் உலகெங்கிலும் இருந்து ஈர்த்திருக்கிறது.

#TamilSchoolmychoice

சரி! குறிப்பாக அமெரிக்க நிறுவனங்கள் மட்டும் இந்திய தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டுவது ஏன்?

சீனாவின் போக்குதான் என்கின்றனர் ஆய்வாளர்கள்!

அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகள்

அமேசோன் கடந்த ஜனவரியில் 1 பில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்வதாக அறிவித்தது. அடுத்து பேஸ்புக் 6 பில்லியன் டாலர்கள் தனது பங்கு என்றது. கூகுள் அதற்கும் ஒருபடி மேலே சென்று 10 பில்லியன் முதலீடு செய்கிறோம் என்றது.

ஏறத்தாழ 20 பில்லியன் டாலர்கள் அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து மட்டும் பெறப்பட்டிருக்கின்றன. அதில் பெரும்பான்மையானவை முகேஷ் அம்பானியின் ஜியோ பிளாட்போர்ம் நிறுவனத்தின் பங்குகளைப் போட்டி போட்டுக் கொண்டு வாங்குவதற்காக செய்யப்பட்ட முதலீடுகள்.

இதை சில மாதங்களுக்கும் முன்னர் யாரும் கணித்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், சீனாவின் கெடுபிடிகள், அமெரிக்கா சீனாவுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் சேர்ந்து அமெரிக்கத் தொழில் நுட்ப நிறுவனங்களின் பார்வையை இந்தியா பக்கம் திருப்பியிருக்கின்றன.

போதாக் குறைக்கு சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லைப்புற மோதல்கள், அதனால் இந்தியத் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள், அந்த இருநாடுகளுக்கும் இடையிலான போர்க்களத்தை, தொழில்நுட்பத் தளத்திற்கு இடம் மாற்றியுள்ளன.

சீனாவின் 59 குறுஞ்செயலிகள் இந்தியாவால் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவும் டிக் டாக்கைத் தடை செய்ய உத்தேசிப்பதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார்.

இந்தியாவின் திறன்பேசிகள் சந்தையை (ஸ்மார்ட்போன்) சீனாவின் கருவிகள்தான் ஆக்கிரமித்திருக்கின்றன.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வணிக ரீதியில் பல மேம்பாடுகள் நிகழ்ந்திருந்தாலும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு என்று வரும்போது இருநாடுகளுக்கும் இடையில் ஏழாம் பொருத்தம் என்று கூறும் அளவுக்கு எதிரெதிர் மோதல்களாகவே இருந்து வந்திருக்கின்றன.

அண்மையக் காலமாக அமெரிக்கா வாவே போன்ற சீன நிறுவனங்களுக்கு எதிராக விதித்த தடைகள், ஹாங்காங் பிரச்சனை ஆகியவற்றால் அமெரிக்காவின் சிலிக்கோன் பள்ளத்தாக்கின் தொழில்நுட்ப மாமலைகள் சீனாவில் தொடர்ந்து தங்களின் வணிகங்களை விரிவாக்க, ஆழமாகப் பதிக்க, பெரும் சிரமங்களை உருவாக்கின. சீனா விதித்திருக்கும் கட்டுப்பாடுகளும் ஏராளம்!

அமெரிக்கா, இந்தியா நீண்டகால தொழில்நுட்ப ஒத்துழைப்பு

ஆனால், இந்தியா அப்படியல்ல!

இந்தியாவின் தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியியலாளர்கள்தான் அமெரிக்காவின் சிலிக்கோன் பள்ளத்தாக்கிலும் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் இலட்சக்கணக்கில் பரவிக் கிடக்கின்றனர்.

இன்றைக்கு அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கான கூட்டம் ஒன்றை டொனால்ட் டிரம்ப் நடத்தினால் அதில் கலந்து கொள்ளும் 70 விழுக்காட்டினர் இந்தியர்களாகத்தான் இருப்பார்கள்.

எனவே, அமெரிக்காவின் நிறுவனங்கள் இந்தியா பக்கம் திரும்பியதில் ஆச்சரியமில்லை.

ஜனநாயக நாடு! கட்டுப்பாடுகள் இல்லாத தாராள சூழல்! அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்புகள் இல்லாத நாடு! இதுபோன்ற சாதகங்களைக் கொண்டது  இந்தியா!

அதுமட்டுமல்ல! 700 மில்லியன் இணையப் பயனர்களைக் கொண்டிருப்பது இந்தியா! அடுத்து வரும் ஆண்டுகளில் மேலும் 500 மில்லியன் பயனர்கள் இந்தியச் சந்தைக்குள் நுழையவிருக்கின்றனர்.

இதையெல்லாம் தவிர்த்து விட்டு, அத்தகைய பெரிய சந்தையில் கவனம் செலுத்தாமல் பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் வணிகங்களை விரிவாக்கம் செய்ய முடியாது.

எனவேதான், இந்தியாவின் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சியை நம்பி அமெரிக்க நிறுவனங்கள் பணத்தைக் கொட்டுகின்றன.

சீனாவிலோ எதிர்மறையான நிலை. பேஸ்புக், கூகுள், டுவிட்டர் போன்ற நிறுவனங்கள் தங்களின் தரவுகளை ஹாங்காங் அரசாங்கத்துடன் பகிர மாட்டோம் என அறிவித்திருக்கின்றனர். டிக் டாக் ஹாங்காங்கிலிருந்து முற்றாக வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது.

வாவே நிறுவனத்திற்கு பிரிட்டன் தடைவிதித்திருக்கிறது.

இந்நிலையில்தான், 2016-இல் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளிலேயே 400 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டிருக்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி பெற்றிருக்கும் ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்தை நோக்கித் தங்களின் கவனத்தைத் திசை திருப்பியிருக்கின்றனர் அமெரிக்க நிறுவனங்கள்.

ஜியோவை நுழைவாயிலாகக் கொண்டு முதலீடு செய்து இந்தியாவின் இணைய வணிக வளர்ச்சியில், தொழில்நுட்ப வளர்ச்சியில் தங்களை இணைத்துக் கொள்வதுதான் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளுக்கான காரணங்கள்!

-இரா.முத்தரசன்